Tuesday, July 13, 2010

பிரண்டை

                  வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான் என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடராய் அலைகின்றோம்.

மூலிகைகளை தேடி நாம் அலைய வேண்டியதில்லை. சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் வயல் வரப்புகளிலும் பல வகையான மூலிகைகள் யாரும் நீரூற்றி வளர்க்காமல் தானாகவே வளர்ந்து நிற்கின்றன.

இப்படி அரிய மருத்துவக் குணங்களைக் கொண்ட மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் கண்டு வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் தோட்டப் பகுதியில் வேலிகளிலும், மரங்களில் மேலும் படர்ந்து காணப்படும் பிரண்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.

இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.

முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும்.

இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

Tamil - Pirandai

English - Bone-setter

Telugu - Nalleru

Malayalam - changalam paranda

Sanskrit - Astisringala

Hindi - Hadjora

Botanical Name - Cissus quadrangula

பிரண்டையை நெய் யால்வறுத்துப் பின்னரைத்து மாதே

வெருண்டிடா தேன்று விழுங்கில்- அரண்டுவரும்

மூலத் தினவடங்கும் மூலவி ரத்தமறும்

ஞாலத்தி னுள்ளே நவில்

- அகத்தியர் குணபாடம்

உடல் தேற

சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாகக் காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமல் நீங்க
வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

இரத்த மூலநோய் குணமாக

மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட
சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

முதுகு வலி, கழுத்து வலி குணமாக
சிலர் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இவர்களின் எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

எலும்பு முறிவுக்கு
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இதயம் பலப்பட
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.


நன்றி  : நக்கீரன்

No comments:

Post a Comment