தேர்தல் வந்துவிட்டது... கூடவே உடன் பிறவா சகோதரியான 'இலவசமும்'!
கழகங்கள் போட்டி போட்டு இலவச வாக்குறுதிகளை அள்ளிவிட குஷியாகிப் போனார்கள் மாண்புமிகு (தேர்தல் முடியும் வரை மட்டும்) வாக்காளர்களில் பெரும்பாலானோர். ஏதோ ஒன்று நிச்சயம் என நினைக்கும்போது, அவர்கள் ஆனந்த பரவச நிலையை அடைகிறார்கள்.
'திருமங்கலமும்' உண்டு என்பதை அறிந்து வழிமேல் விழிவைத்து பலர் காத்திருக்க, 'விழி'த்து நிற்கிறது தேர்தல் கமிஷன்.
ஆனால், இந்த இலவசங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நடுநிலையாளர்களும், நாட்டுப்பற்றுடையவர்களும் சிந்திக்கின்றார்களா என்பது கேள்விக்குரியே.
நூறு நாள் வேலைத் திட்டத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. மாறாக, வேலையாட்களையே ஒழித்தது. வேலையாட்கள் இல்லாமல் வெட்டப்பட வேண்டிய கரும்புகள் காய்ந்து உழைத்தவனை நொந்ஹ்டு போகச் செய்தன.
பொருளாதாரத்தில் உயரிய நிலையில் உள்ள எந்த ஒரு நாடும் தனது வறிய மக்களுக்கு இலவசங்களை அளிப்பது இல்லை.
கடந்த மாத புள்ளிவிவரப்படி, தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடி என்கிறது. இன்னும் இலவசங்கள் தொடர, கழகங்கள் போடுகிற போட்டி எங்கு போய் முடியுமோ?
கடந்த ஆட்சி என்னவோ இலவசங்களால் மக்களை வசப்படுத்த, அதையே சூத்திரமாக நினைக்கிறது மற்றொரு கழகம். எந்த ஒரு கட்சியிடமும் தமிழகத்தை வளப்படுத்த உருப்படியான திட்டங்கள் இல்லை. நிரந்தர வளர்ச்சிக்கு வழியில்லை.
அடுத்த 5 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் 2 மடங்கு அதிகரிக்கும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இன்னும் 20 ஆண்டுகளில் தென் இந்தியா வறண்ட பாலைவனம் ஆகும் என்கிறது உலகச் சுற்றுச் சூழல் நிறுவனம்.
சமகால பிரச்னைக்கு தீர்வு இல்லாதபோது, எதிர்காலச் சிக்கல்களை யார் தீர்ப்பார்கள்?
பீகாரைப் போல் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு, அடிப்படை வசதிகளை அசுர வேகத்தில் நகர்த்திச் செல்லும் நிதிஷ் குமார் போன்றோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளை தானே களத்தில் இறங்கி உழைக்கும் மோடியைப் போன்றோ அல்லது சிறந்த தொலைநோக்குடன் மேற்கு வங்கத்தை அழைத்துச் செல்ல முற்படும் மம்தாவைப் போன்றோ தலைவர்கள் இங்கு இல்லாதது பரிதாப நிலை.
தீராத மின்வெட்டு, கோடியில் குடிநீர் பற்றாக்குறை, தொடரும் மீனவர் பிரச்னை, முடிவில்லா காவிரி சிக்கல் என பலவற்றுக்கும் தீர்வு இல்லை.
இவ்வாறு 'இல்லை'கள்... தொல்லைகளாக தொடர, பிரார்த்திப்போம் இப்படி...
"இறைவா, எங்கள் செந்தமிழ் நாட்டுக்கு நல்லதொரு தலைவனைக் கொடு... அதுவரை, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் தலைவருக்கு நல்ல புத்தியைக் கொடு."
அறந்தை அபுதாகிர்