Friday, March 25, 2011

இன்றைய செய்தியும் நேற்றைய வரலாறும்

இன்றைய செய்தியும் நேற்றைய வரலாறும் : செய்தி: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், 2006 தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்துக் கணக்கைப் போல், 2011ல் அளித்த சொத்துக் கணக்கு இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதில் எவ்வளவு நிஜம் என்பது, எல்லாருக்கும் தெரியும்.
வரலாறு: சபர்மதி ஆசிரமம்; காந்தியடிகளின் குடில். காந்தியடிகளுக்குச் சேவை செய்யும் மனுபென் காந்தி, காந்தியடிகள் குடிப்பதற்கு ஒரு சொம்பு மாம்பழச்சாறு கொண்டு தருகிறார். காந்தி கேட்கிறார், "எத்தனை மாம்பழத்தின் சாறு' என்று. மனுபென், "இரண்டு' என்கிறார்.

"இரண்டு மாம்பழங்கள் அரையணா. அவ்வளவு மாம்பழச்சாறு சாப்பிடுவதற்கான உடல் உழைப்பு எதையும் நான் செய்யவில்லையே. அப்படி இருக்கையில், நான் இதை அருந்துவது தேசத் துரோகம் அல்லவா. ஆசிரமத்தில் இருக்கும் அரிசனச் சிறுவர்களுக்கு கொடுத்துவிடு' என்றார்.

ஆசிரமத்தில் செயற்குழு வருடம் ஒருமுறை கூடி, ஒவ்வொருவருக்கும் மாதச் செலவிற்கென்று அனுமதி யளிக்கும்.

காந்தியடிகளுக்கு அனுமதிக்கப் பட்ட தொகையை விட, ஒரு மாதம், அரையணா அதிகமாகி விடுகிறது. செயலர் தஞ்சை ஜே.சி.குமரப்பாவுக்கு, ஆசிரம விதிகள் படி காந்தியடிகள் கடிதம் எழுதுகிறார்.

"சென்ற மாதம் எனக்கு விருந்தினர்கள் அதிகம் வந்துவிட்டபடியால், அரையணா அதிகம் செலவாகிவிட்டது. அதை நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என, கோருகிறார்.

செயலர் குமரப்பா, "அடுத்த வருடம் செயற்குழு கூடி முடிவெடுக்கிற வரை எந்த அனுமதியும் தர முடியாது. அதனால், இந்த மாதம் உங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஆசிரம நிர்வாகம் கழித்துக் கொள்ளும்' என்று பதிலளித்து விட்டார்.

எல்லாராலும் கேலி செய்யப்பட்டு, பாகிஸ்தான் போரில் மிகப் பெரிய வெற்றி பெற்றாரே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அவர் அகில இந்தியக் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாளராக இருந்தபோது, மாதச் சம்பளம், 15 ரூபாய்.

ஒரு நண்பர், சாஸ்திரியிடம் கைமாறாக ஐந்து ரூபாய் கேட்டார். சாஸ்திரி, "என்னிடம் இல்லையே' என்றார்.

சாஸ்திரியின் மனைவி, அவரை உள்ளே கூப்பிட்டு, ஐந்து ரூபாய் கொடுத்தார். "ஏது பணம்' என்றார் சாஸ்திரி. "சம்பளத்தில் சிக்கனமாகச் செலவழித்து மிச்சம் பிடித்தேன்' என்றார் மனைவி. உடனே சாஸ்திரி தன் ஓட்டை சைக்கிளில் ஏறி, காங்கிரஸ் அலுவலகம் சென்று, "அடுத்த மாதத்தில் இருந்து என் சம்பளத்தில் ஐந்து ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.

விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு என்று பெயரிட முதல் குரல் கொடுத்தவர், தமிழ் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்கப் போராடியவர், தோழர் ஜீவானந்தம். திருநெல்வேலியில் இருந்து கட்சிக்கு வசூல் செய்த பணத்தோடு, ரயிலில் போனார்.

காலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தன்னைச் சந்திக்க வந்த தோழர்களிடம், இரண்டு டீ கேட்டார். "ஏன் இரண்டு' என்று தோழர்கள் கேட்க, "இரவு சாப்பிடவில்லை; பசிக்கிறது' என்றார் தோழர் ஜீவா. "கையில் தான் பணம் இருக்கிறதே' என்றனர் தோழர்கள். "அது உழைப்பாளிகள், விவசாயிகள் தந்த பணம். அதைக் கட்சி அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்' என்றார் ஜீவா.

அது அன்று.

இன்று, எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் அவரவர் சம்பளத்தை, அவர்களே உயர்த்திக் கொள்ளும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது.

உள்துறை அமைச்சராக இருந்த தியாகச் செம்மல் கக்கன், மதுரை அரசு மருத்துவமனையில் பொதுமக்களோடு, தரையில் ஒரு பாயில் படுத்திருந்தார். மூப்பனாரில் இருந்து, மதுரைக்கு வரும் எந்தத் தலைவரும், அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. கொடுப்பதற் கென்றே பிறந்த எம்.ஜி.ஆர்., இந்தக் கொடுமையைக் கண்டு கண்ணீர் வடித்து, அவருக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தார்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ராமையா, சென்னையிலே மரணம் அடைந்தார். சென்னையில் இருந்து, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வாடகைக் காரில் கொண்டு வர, அவர் குடும்பத்தினரிடம் பணம் இல்லை.

பெண் அமைச்சர், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன், ஓராண்டுக்கு முன், ஓர் அனாதை நிலையத்தில் இறந்து போனார். இவர்கள் எல்லாம், காமராஜரின், உண்மையான காங்கிரசின் அமைச்சர்கள்! இன்று?

நெல்லைக்கண்ணன்.

No comments:

Post a Comment