Showing posts with label Leader. Show all posts
Showing posts with label Leader. Show all posts

Wednesday, May 19, 2010

Salute



தலைவன் , வீரத்தமிழனுக்கு வாழ்த்துக்கள்!

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்

எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லது குடும்பத்தில் அரசியல் தலைவரின் விதவையாக இருக்க வேண்டும், குறைந்த பட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட இருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ "தமிழீழம்" வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக்கொண்டு, அந்த இலட்சியத்தை எந்தவொரு சுழ்நிலையுலும், எதற்காகவும் விட்டுக்கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக்கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் "தமிழீழத் தேசியத்தலைவர்" என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படி தலைவன் ஆனாய்?

பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும்தான். அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத் துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்கு சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவிஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே.  அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே, அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை, உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாக சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள்; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும், அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கு கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும். அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு!

ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தப்க்கியிருப்பதுகூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகிவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் அழைத்து சென்றுவிட்டாயே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்?

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளை தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுபட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்து கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனி திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படி துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேலிக்குள் அகதிகளாய் அடைபட்டுயிருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான பெற்றோரையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி? உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாகயுள்ளமும் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம் எங்கு போராடினாலும், அந்த போராட்டத்திற்கு அடையாளமாக இருக்க போவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

நன்றி சேசுபாலன்