Tuesday, July 13, 2010

ஆடாதோடை

சுவாச காசம்



                   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப மனித வாழ்க்கைஆரோக்கியமாக அமைந்துவிட்டால் அதுதான் அனைத்து செல்வங்களுள் தலையாயசெல்வமாகும்.

ஆனால் இன்றைய மாசுபட்ட உலகில் பலர் பலவகையான நோய்களின் தாக்குதலுக்குஆளாகியுள்ளனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின் தாக்குதல் இல்லாமல்முழு ஆரோக்கியத்துடன் இருப்பவர்களை எண்ணிக்கையில் கொண்டுவந்துவிடலாம்.

இந்த வகையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் சுவாச காச நோய்என்னும் இரைப்பு நோயும் ஒன்று. இந்த நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.அதில் அலர்ஜியும் ஒரு காரணம்.

இரைப்பு நோயின் அறிகுறிகள்

மார்பை இறுக்கியது போன்ற வலியுடனான வேதனை உருவாகும்.

மூச்சை உள்ளிழுக்கவும், வெளியிடவும் முடியாமல் திணறல் உண்டாகும்.

மூச்சு விடும்போது மெல்லிய சப்தம் உண்டாகும்.

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை துன்புறுத்தும் சுவாச காச நோயைபோக்க பயன்படும் எண்ணிலடங்கா மூலிகைகளைப் பற்றி சித்தர்கள் அன்றேகண்டறிந்து கூறியுள்ளனர்.

அவற்றில் இரண்டு மூலிகைகளைப் பற்றி காண்போம்.

ஆடாதோடை

ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்

கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின

மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்

அகத்துநோய் போக்கு மறி

- அகத்தியர் குணபாடம்

ஆடாதோடையை வாசை என்றும் அழைப்பார்கள். இது செடி வகையைச் சார்ந்தது.தென்னிந்தியா முழுவதும் மற்றும் வங்க தேசம் இலங்கையிலும் அதிகம்வளர்கிறது. மா இலையைப் போல தோற்றமளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, வேர்,அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டது .

ஆடாதோடை இலையின் சாறு 10 முதல் 20 துளி வரை எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க, இருமல், இரைப்பு, இளைப்பு போன்ற நோய்கள் தீரும்.

பட்டை

ஆடாதோடையின் பட்டையை பொடிசெய்து தேனில் கலந்து கொடுக்க சுரம், இரைப்பு ஆகியவை நீங்கும்.

வேர்

காசமொடு மந்தங்க கதித்தபித் தங்கொடுஞ்சு

வாசங் கழுத்து வளமுதனோய் - கூசியே

ஓடாதி ராதிங் கொருநாளு மொண்டொடியே

ஆடாதோடைத்தூருக் கஞ்சி

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் நீரில் கொதிக்க வைத்துஅதனுடன் திப்பிலி பொடி கலந்து காலை மாலை இருவேளையும் கொடுத்து வந்தால்ரத்தக் கொதிப்பு மூச்சிரைப்பு இருமல் சுவாச காச நோய்கள் குணமாகும்.

ஆடாதோடை வேர்

கண்டங்கத்திரி வேர்

சுக்கு

கொள்ளு

இவற்றை சம அளவு எடுத்து குடிநீராக்கி அதில் அல்லிக் கிழங்கின் பொடியைச் சேர்த்து கொடுத்தால் இரைப்பு, இருமல் நீங்கும்.

அரத்தை

தொண்டையிற் கட்டுங் கபத்தைச் தூரத் துரத்திவிடும்

பண்டைச்சீ தத்தைப் பறக்கடிக்கும்-கெண்டை விழி

மின்னே ! கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும்

சொன்னோம் அரத்தைச் சுகம்

- அகத்தியர் குணபாடம்

அரத்தையில் சிற்றரத்தை, பேரரத்தை என இருவகைகள் உள்ளன. இவை இந்தியாமுழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதன் வேர் அதிக மருத்துவக் குணம்கொண்டது. இன்றும் நம் கிராமங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில்வளர்க்கப்படும் செடி வகைகளில் இதுவும் ஒன்று.

இவை இரண்டின் வேர்கள் கோழையகற்றும் தன்மை கொண்டவை.

இதன் குணம் : நெஞ்சுக்கோழை, ஈளை, இருமல், நாள்பட்ட ஐயம், கரப்பான்,மார்பு நோய், வீக்கம், பல்நோய் இவற்றைப் போக்கும். நன்கு பசியைத்தூண்டும்.

சிற்றரத்தை வேரின் சிறு துண்டை வாயிலிட்டுச் சுவைக்க தொண்டையிற் கட்டும் கோழை, இருமல், வாந்தி, இரைப்பு தணியும்.

அரத்தை பொடியை தேனுடன் கலந்து கொடுத்தாலும், அரத்தையை நன்கு இடித்துவெந்நீரில் போடடு ஊறவைத்து வடிகட்டி தேனில் கொடுத்தால் நாட்பட்ட கபம்,காசம் நீங்கும்.

அரத்தை, அதிமதுரம், தாளிசம், திப்பிலி வகைக்கு ஒரு வராகன் எடை எடுத்துநீர்விட்டு அரைத்து கால் ஆழாக்கு அளவு நீரில் கலக்கி பொங்கவிட்டு வடித்துசிறிது தேன் சேர்த்துக் கொடுக்க, இருமல், கோழைக்கட்டு சீதளம் நீங்கும்.

நன்றி:  நக்கீரன்

No comments:

Post a Comment