தேர்தல்  நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான  முயற்சிகளில் மும்முரம் காட்ட இருக்கின்றன. பொதுவாக, தற்போது கட்சிகள்   அமைக்கும் கூட்டணிகள், கொள்கைகளின் அடிப்படையில் அல்லாமல்,பல்வேறு சுயநல  அடிப்படையில் மட்டுமே உருவாவதும், தேர்தலுக்குப் பிறகு கருத்து  வேறுபாடுகள்  காரணமாக கூட்டணிக் கட்சிகள் எதிரெதிராக மாறுவதும்  சகஜமாகிவிட்டன.இதன் காரணமாக,வாக்காளர்களின் உண்மையான விருப்பங்கள் தேர்தல்  முடிவுகளில்  வெளிப்பட முடியாத நிலை காணப்படுகிறது. இத்தகைய முறையற்ற  கூட்டணிகள் அமைவதை நமது சட்டங்களால் தடுக்க முடியாததால், தேர்தல்கள் மூலம்  ஒருவித போலி  ஜனநாயகமே நமக்குக் கிடைக்கிறது.
தேர்தல்  அறிவிக்கப்பட்ட பின்பு, அத்தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட விரும்பும்  கட்சிகள், தமது கூட்டணியின் பெயர், கொள்கைகள், தலைமை, பங்குபெறும்  கட்சிகள் போன்ற தகவல்களை குறித்த காலத்திற்குள் தேர்தல் கமிஷனிடம் முறையாக  தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும். அதற்குப் பிறகு, கூட்டணிக்குள்  எவ்வித  மாற்றத்தையும் அனுமதிக்கக்கூடாது.தேர்தல் கமிஷனிடம் கூட்டணி  குறித்த தகவல்களைத் தெரிவிக்காத கட்சிகள்,பிறகு கூட்டணி அமைத்து போட்டியிட  அனுமதிக்கக்  கூடாது.
கூட்டணி அமைத்த பிறகு கூட்டணிக்கென்று பொதுவான தேர்தல் அறிக்கையை மட்டுமே வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று,கூட்டணிக்  கட்சிகள் அனைத்தும்,கூட்டணிக்கென ஒதுக்கப்படும் பொதுவான சின்னத்தில்  மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு  கூட்டணியில்  இடம்பெறும் கட்சிகளின் வேட்பாளர்கள், அக்கூட்டணியின் வேட்பாளர்களாக மட்டுமே  கருதப்பட வேண்டுமேயொழிய,தமது கட்சியின் வேட்பாளர்களாகக்   கருதப்படக்கூடாது.
தேர்தலின் மூலம்,ஒரு கூட்டணியின் சார்பாக,மக்கள்  பிரதிநிதிகள் (சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம்)தேர்ந்தெடுக்கப்படும்  உறுப்பினர்கள்,அச்சபையில் கூட் டணியின் உறுப்பினர்களாக மட்டுமே கருதப்பட  வேண்டும்.
ஒரு கூட்டணியிலிருந்து, எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள்  வெளியேற விரும்பினால்,கட்சித்தாவல் என கருதப்பட்டு அவர்களின் பதவி  பறிக்கப்படும் விதத்தில்  நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.
இத்தகைய  விதிமுறைகளை அறிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி  அமைத்து,தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்பது மக்களாட்சிக்கு  எதிரான அவலங்களை தெரிந்தே அனுமதிப்பதற்கு ஒப்பான செயல்!
- ப. அருண்மணி,சேலம்-9.
நன்றி: குமுதம்  
 
No comments:
Post a Comment