Thursday, July 15, 2010

இந்திய ரூபாய் அடையாளக் குறியீடு

இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, ஜூலை 15,2010 : இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது.

இதற்கென, தேவனகிரி ரா (Ra) மற்றும் ரோமன் ஆர் (R) ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய்க்காக தெரிவு செய்யப்பட்டிருந்த ஐந்து குறியீடுகளில், ஐ.ஐ.டி. முதுகலை பட்டதாரி உதய் குமார் வடிவமைத்த குறியீட்டையே மத்திய அமைச்சரவை தேர்வு செய்தது.

ரூபாய்க்கான புதிய குறியீட்டின் வடிவத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி வெளியிட்டார்.
'உலகப் பொருளாதாரத்துடன் சேர்ந்து இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் முதலீடுகள் குவியும் முனையமாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெல்லிங், ஜப்பான் யென், ஐரோப்பிய யூனியனின் யூரோ ஆகிய கரன்சிகளுக்கு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் பிரத்யேக குறியீடு வடிவமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் ருபையா, ருபி என்ற பெயரில் கரன்சி பயன்படுத்துவதால் அவற்றில் இருந்து இந்திய ரூபாயை வித்தியாசப்படுத்திக்காட்டும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ரூபாய்க்கு குறியீடு வடிவமைக்க இந்திய குடிமக்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டது. குறியீட்டை வரைந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன.

இவற்றில் இருந்து சிறந்த குறியீட்டைத் தேர்வு செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவர் தலைமையில் ஓவியம் மற்றும் டிசைனிங் நிறுவனங்களைச் சேர்ந்த 3 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 5 குறியீடுகளை இக்குழு தேரிவு செய்து, அவற்றை மத்திய அரசு பரிசீலனைக்கு அனுப்பியது. அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி அதை வெளியிட்டுள்ளது.

இந்திய தரக்கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்தக் குறியீட்டுக்கான எழுத்துரு 6 மாதத்தில் உருவாக்கப்படும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் யுனிகோட் மற்றும் ஐஎஸ்ஓ/ஓஇசி 10646 ஆகியவற்றுக்கு ஏற்ப எழுத்துரு இரண்டாண்டுகளுக்குள் உருவாக்கப்படும்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் விசைப் பலகைகளில் யூரோ கரன்சிக்கான குறியீடு கிடையாது. ஆனாலும் அதற்கான எழுத்துரு இருப்பதால் பயன்படுத்துகிறோம். இதே போல விசைப்பலகையில் குறியீடு இல்லாவிட்டாலும் ரூபாய் குறியீட்டை தட்டச்சு செய்யும் வகையில் வசதிகள் செய்யப்படும்.

நன்றி: விகடன் 

No comments:

Post a Comment