Friday, July 16, 2010

Symbol of Rupee - Created by Udhaya Kumar

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!


ஜூலை 15, 2010 :௦ தமிழக இளைஞர் உதய குமார் கைவணத்தில் உருவாகியிருக்கிறது, இந்திய ரூபாய்க் குறியீடு! இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது.



நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ரூபாய்க்கு குறியீடு வடிவமைக்க போட்டி அறிவிக்கப்பட்டது. குறியீட்டை வரைந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன.



அதில் இருந்து தேர்ந்தெடுத்து, இறுதி செய்யப்பட்டுள்ள இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த டி.உதய குமார் (வயது 32). அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, அவருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.



( இந்திய ரூபாய்க் குறியீடு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள... இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல் )



சென்னையில் பிறந்து வளர்ந்த உதய குமார், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆர்க்கிடெக் படித்தவர். பின்னர், மும்பை ஐ.ஐ.டி.யில் டிஸைனிங்கில் பி.எச்டி பயில்பவர். தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.



"நான் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.



நீண்ட நாட்கள் சிந்தித்து, இந்த குறியீட்டை உருவாக்கினேன். தேவனகிரி எழுத்துருவில் இருந்து 'ரா' (Ra)-வை எடுத்து, அதில் நமது தேசியக் கொடியைக் கலந்தேன். குறியீட்டின் மேல்பகுதியில் இந்தியத் தன்மை மிகுந்திருக்கும். பிறகு, ரோமன் எழுத்தான ஆர் (R)-ஐயும் இணைத்தேன், அதன்மூலம் சர்வதேசத் தன்மை கிடைக்கும் என்பதற்காக," என்று கூறியிருக்கிறார் உதய குமார்.



இந்திய ரூபாய்க்கு குறியீடு தந்துள்ள உதய் குமாருக்கு தனது விருப்பப்படியே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவருக்கு, கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 
 
 
இதை படிக்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது.


நன்றி: விகடன்

No comments:

Post a Comment